திருப்பாவை பாசுரம் 13 புள்ளின்

திருப்பாவை பாசுரம் 13

“புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.”

 

‘புள்ளின் வாய் கீண்டானை’-கொக்கு பேடையாக வேடமிட்டு வந்த பகாசுரனை அழித்த கண்ணனையும்

‘பொல்லா அரக்கனை கிள்ளிக்களைந்தானை’-இராவணனை மாய்த்த ஸ்ரீராமனையும்

‘கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்’ புகழும் சரிதங்களைப் பாடிக்கொண்டு தோழியர்கள் பாவை நோன்பைத் துவங்கினர்.

‘பொல்லா அரக்கனை’-அரக்கரில் நல்லவன்,பொல்லாதவன் என உண்டா? ஆம்.உண்டு;

இராவணனின் தம்பி விபீடணன்,ஸ்ரீராமனிடம் அடைக்கலம் புக உறுதி பூண்ட நல்லவனன்றோ

பறவை வேடமிட்டு வந்த பகாசுரனை மாய்த்த கதை,ஆண்டாளுக்கோ இராமபிரான் விபீடணனுக்கு சரணாகதி தந்த மேன்மையை நமக்கு நினைவு கூற வாய்ப்பாக எண்ணுகிறாள்.

பகைவரில் ஒருவனான விபீடணனுக்கு, அபயம் தரமேண்டாமென சுற்றியிருந்தோர் இராமபிரானை வேண்டித் தடுக்க முயன்றார்கள்.

அவர்களுக்கு அறத்தினை விளக்கும் பொருட்டு, புண்ணியமளிக்கும் ஆறறிவற்ற இரு புறாக்களின் தியாகக்கதையை கூறினார் ஸநாதன தர்மனான இராமன்.

அப்புறாக்களே,மேலான செயலைச் செய்கையில்,தான் அடைக்கலம் தருவதே அறம் என்றார்.

இதை கம்பனின் தெளிவான வரிகளில் படிக்க நயம் கூடுகிறது

‘பேடையைப் பிடித்து,தன்னைப் பிடிக்க வந்து அடைந்த பேதை வேடனுக்கு உதவி செய்து, விறகிடை வெந் தீ மூட்டி, பாடுறு பசியை நோக்கி, தன் உடல் கொடுத்த பைம் புள் வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ?

பெண்புறாவைப் பிடித்து அதன் ஜோடியான  தன்னையும்  பிடிக்கவந்த பேதைத்தன்மையுடைய வேடனுக்கு,ஆண் புறா,அவனுக்கு குளிரைப் போக்க,விறகு பொறுக்கிவந்து தீ மூட்டி,அவனது பெரும்பசி தீர்க்க,அத்தீயில் வீழ்ந்து தனது உடலையே உணவாக ஈந்த அந்த ஆண்புறா,பரமபதம் பெற்றுயர்ந்தது என்ற கதை,வேதத்தைவிட மேலானது.

சரணாகதி தத்துவத்தை உணர்த்திய ஆசார்யனாய்,இராமபிரான், இவ்வாறு புறாக்களின் தியாகக்கதையை முன்னிறுத்தி “இராமதேசிகன்” என்ற பெருமையை உடையவனாய் திகழ்கிறான்.

‘வெள்ளி எழுந்து வியாழமுறங்கிற்று’-நாள் நன்கு விடிந்தது.

‘புள்ளும் சிலம்பினகாண்’-6ம் பாசுரத்தில் முன்னரே வரும் சொற்கள்,இப்பாசுரத்திலும் அதே பொருளையே தருமெனத் தோன்றினும்,முன்னர் சொன்னது கூட்டினின்று எழுந்த பட்சிகளின் ஒலியையும்,இதில் இரை தேடுபவையின் ஒலியையும் குறிக்கும் எனக் கொளலாம்

‘போதரிக் கண்ணினாய்’

போது+அரி-பூவின் வண்டு போல,உறக்கம் விழித்தும்,அசையும் கண்கள் காட்டித் தரும் கண்களை உடையவளும்,

‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ  பாவாய் நீ’- நீரின் குளுமை குறைவதற்கு முன்னமேயே நீராடாமல், படுக்கையில் கிடந்து, (பொய்யான) கனவுலகில் சஞ்சரிப்பவளை!

‘கள்ளம் தவிர்ந்து நன்னாளால் கலந்தேலோர் எம்பாவாய்’-

அந்தப் பொய்க் கனவைத் தவிர்த்து,இந்த மார்கழி நாளில் எங்களுடன் சேர்ந்து இறையானுபவம் கொள்ள வருக!!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

🙏🙏🙏🙏

 

Leave a comment