திருப்பாவை பாசுரம் 12 கனைத்து

திருப்பாவை பாசுரம் 11

கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

 

முன் பாசுரத்தில் கோவலர் தம் பொற்கொடி என அடியாரின் தந்தைமார் போற்றப்பட்டனர். இதில் நற்செல்வன் தங்காய் என தோழியின் தமையனை போற்றுகிறாள் ஆண்டாள்.

இளையபெருமாளைப் போலே கிருஷ்ணனைப் பிரியாமல் இருப்பரில் ஒருவனான ஸ்ரீதாமனெனும் நற்செல்வனின் தங்கையை எழுப்புகிறாள்

நற்செல்வன் என்பது கண்ணன்,பலராமன் இவர்களுடன்,சிறுவயதில் ஒன்றாய் விளையாடினோரில்,ஒருவனான ஸ்ரீதாமன் என்பவனே- வில்லிவலம் அழகியசிங்கர்.

‘கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி’-இளங்கன்றுகளையுடைய எருமை,அவை பாலை உண்ணாமல் இருக்கின்றனவே என கனைத்து,தன் கன்றுகளுக்காக இரங்கி

இளங்கன்றுகள்- ஜீவாத்மாக்கள்

‘நினைத்து முலை வழியே’-எம்பெருமான் ஸங்கல்பத்தால்,ஆசார்யர் மூலம்.

இறைவனின் கருணையை,நேராகவன்றி ஆசார்யரிடமிருந்து பெறுவதே எளிது.

‘நின்று பாற்சோர’- எப்போதும்,கருணையெனும் பாலைச் சுரந்து கொண்டிருக்கையிலே-கருணையெனும் பாலை எப்போதும்  சுரப்பவன்-பரமாத்மா எம்பெருமான்

devathi devan 2

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்-அந்தக் கருணையை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் அடியாரில் ஒருவனான இத்தமையனின் தங்கையே!!

இல்லம்- தொண்டாற்றுவதையே தன் குறிக்கோளாகக் கொண்ட நற்செல்வன் போன்ற அடியார்களைக் கொண்ட  உலகம்.

சுவாமி நம்மாழ்வார் மூன்று வித அடியார்களை பற்றிப் பாடியுள்ளார்.

சயமே அடிமைத்தலை நின்றார்-பரதன்

நீக்கமில் அடியவர் -இலக்குமணன்

குற்றமில் அடியவர் -சத்ருக்னன்

 

“வியன்மூ வுலகு பெறினும்போய்த் தானே தானே யானாலும்,

புயல்மே கம்போல் திருமேனி அம்மான் புனைபூங் கழலடிக்கீழ்,

சயமே யடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி, இம்மையே

பயனே யின்பம் யான்பெற்ற துறுமோ பாவி யேனுக்கே? “- சுவாமி நம்மாழ்வார்

சயமே யடிமை தலைநின்றார் – தன் விருப்பமாகவே கைங்கர்யம் செய்வதில் மேல்தட்டில் உள்ள பரதாழ்வானைக் குறிக்கும்

‘பனித்தலைவீழ நின் வாசற்கடைபற்றி’ –

தலையில் பனி விழும் அதிகாலையில்,உன் வீட்டை வந்து சேர்ந்தோம்

‘சினத்தினால் தென்இலங்கைக்கோமானைச்செற்ற’

பொதுவாக பகவானின் கல்யாண குணங்களாக  ஸௌஶீல்யம், வாத்ஸல்யம்,மார்தவம்,ஆர்ஜவம்,ஸௌஹார்தம்,ஸாம்யம்,காருண்யம்,மாதுர்யம்,காம்பீர்யம்,சாதுர்யம்,ஸ்தைர்யம்,ஸத்யகாம,ஸத்ய ஸங்கல்ப என்பவை தான் அடிக்கிக் கொண்டே பேசப்படும். ஆனால் ஆண்டாளோ,அனந்த கல்யாண குணமுடையோனுக்கு, சினத்தினால் செற்ற என சினத்திற்கு முக்கியத்துவம் தந்துள்ளாள்.,

‘சினம்’ என்பது இராமபிரானின் கோதண்டத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

மனத்துக்கினியானைப்பாடவும்நீ வாய்திறவாய்’

‘மனத்துக்கினியான்’- இராவணனை வதம் செய்ததால், சீதா தேவியின் மனம் மட்டுமா குளிர்ந்தது? எல்லா தேவர்கள், ரிஷிகள், அயோத்தி வாழ் மககள், வானரங்கள் என எத்தனை பேரின் மனங்களைக் குளிரப் பண்ணவன், ஆகவே இராமனே மனத்துக்கினியான்.

மக்களின் மனம் எந்த அளவு குளிர்ந்ததெனில், அவர்கள் இராமாயணத்திற்கு முக்கிய திருப்புமுனை பாத்திரங்களான கூனிக்கும்,சூர்ப்பனகைக்கும் கூட ஆசிகளை வழங்கத் தொடங்கினராம், இவர்களாலன்றோ, இராவணனை இராமபிரான் மாய்க்க நேர்ந்தது!!

‘இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.’-உனது பேருறக்கத்தை உலகத்தார் அனைவரும் அறியுமுன் எழுந்திரு என முடிக்கிறாள்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

🙏🙏🙏🙏

 

Leave a comment